புதன், 1 பிப்ரவரி, 2012

மினாவில் செய்ய வேண்டியவை

மினாவில் செய்ய வேண்டியவை
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தன் மகனைப் பலியிட முன்வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை கற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது. 

அதை நினவு கூறும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும்‘மினா’வில் அமைந்துள்ளன.

முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும்போது இடப்புறமாக ‘ஜம்ரதுல் அகபா’ எனும் இடம் அமைந்துள்ளது. துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.

நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது. இரவே மினாவுக்குச் சென்றவர்களும் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன்கூட்டியே அனுப்பிய போது, “ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதீ.
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்;தைச்) சற்று விரைவுபடுத்தினார்கள். ‘ஜம்ரதுல் அகபா’வை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள். பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை. விரட்டுதல் இல்லை. வழிவிடு, வழிவிடு என்பது போன்ற கூச்சல் இல்லை.
அறிவிப்பவர் : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள் : நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டு “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர் என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ததும் அவர் இஹ்ராமிலிருந்து ஒரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுகிறார். தலைமயிரை சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மழித்துக் கொள்ளலாகாது.
நபி (ஸல்) அவர்கள் மினாவுக்கு வந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். பிறகு தமது தங்குமிடம் வந்து ஒட்டகத்தை அறுத்தார்கள். பிறகு மழிக்கக் கூடியவரிடம் தமது வலது பகுதியையும் இடது பகுதியையும் சுட்டிக் காட்டி ‘அகற்றுவீராக’ என்றனர். பிறகு அதை மக்களுக்குக் கொடுக்கலானார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் 
“இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். “இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 
“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்கு கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அபூதாவூத், தப்ரானி, தாரகுத்னி 
“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா
“நான் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசிவிட்டேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது, சம்மந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்) பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும், அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். மற்றொருவர் அவர்களிடம் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத

புகாரி, முஸ்லிமில் இடம் பெறும் இன்னொரு அறிவிப்பில் “குர்பானி கொடுப்பதற்கு முன் மழித்துக் கொண்டேன், கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றும், இன்னும் இதுபோன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், “தவறில்லை செய்வீராக” என்றே அன்றைய தினம் விடையளித்ததாகக் காணப்படுகின்றது.

மினாவில் பத்தாம் நாள் செய்வேண்டிய காரியங்களை முன்பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

தவாப் அல் இபாளா
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு, குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாப் செய்ய வேண்டும். இது ‘தவாப் அல் இபாளா’ எனப்படுகின்றது. இது ‘தவாப் ஸியாரா’ எனவும் கூறப்படுகின்றது. இந்த தவாபைச் செய்துவிட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று ‘தவாப் அல் இபாளா’ செய்துவிட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத
நபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட் வாகனத்தில் ஏறி தவாபுல் இபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும் மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபியவர்கள் ஒருதடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாபுல் இபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்துவிட்டால் அங்கே லுஹர் தொழுதுவிட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒருமுறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக்கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

தவாப் அல் இபாளா செய்யும் முறை
நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் குதூம் செய்யும்போது மூன்று தடவை ஓடியும் நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாபின் போது ஏழுசுற்றிலும் நடந்தேதான் செல்லவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் “ஆரம்ப தவாபின் போது” என்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் இபாளா செய்யும்போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை. 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, ஹாகிம்


பெயர் குறிப்பிடப்பட்ட தவாபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏழு சுற்று சுற்றியதும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. (புகாரி). அதுபோல் ஸபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.

இந்த தவாபை முடித்தபிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் கட்டிய காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.
கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்;ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 

பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். இந்தத் தவாபைச் செய்தவுடன் முழுமையாக அவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.

பெருநாள் தொழுகை கிடையாது 
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாக பல ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது ‘அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹிர்மாஸ்பின் ஸியாத் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்
பத்தாம் நாளன்று மினாவில் நபி (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன். 
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : அபூதாவூத் 

அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.

கல்லெறியும் நாட்களும் இடங்களும்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம். அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.

மினாவுக்குள் நுழையும்போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம். அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது. ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது. இம்மூன்று இடங்களும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழும் நேரத்தில், கடைசி நாளில் (பத்தாம் நாளில்) தவாபுல் இபாளா செய்துவிட்டு மினாவுக்குத் திரும்பினார்கள். (11,12,13 ஆகிய) அய்யாமுத்தஷ்ரீக் நாட்களின் இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொண்டார்கள். சூரியன் சாய்ந்ததும் ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ஜம்ரதுல் ஊலா, ஜம்ரதுல் உஸ்தா ஆகிய இடங்களில் (கல்லெறிந்துவிட்டு) நீண்ட நேரம் நின்று அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்துவிட்டு அவ்விடத்தில் நிற்கமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், ஹாகீம் 
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலா எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்றுமுன்னேறி, சமதரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நிற்பார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்புறமாக நடந்து சென்று சமதரையில் கிப்லாவை நோக்கி நிற்பார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். அங்கே நீண்ட நேரம் நிற்பார்கள். பிறகு பதனுல் வாதி என்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிவார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஸாலிம் நூல்கள் : புகாரி, அஹ்மத் 

குறிப்பிட்ட நாட்களில் (11,12,13) அல்லாஹ்வை நீங்கள் திக்ரு செய்யுங்கள். இரண்டு நாட்களுடன் ஒருவர் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றம் இல்லை. (மூன்றாம் நாளும்) ஒருவர் தாமதித்தால் அவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2 : 203)

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.
“நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்தவுடன் கல்லெறிவோம்”
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, அபூதாவூத். 

இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.
மினாவில் தங்கவேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம் 

உம்ரா என்றால் என்ன?

உம்ரா என்றால் என்ன?
‘உம்ரா’ என்றால் என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான இடம் இதுவாகும். நாம் இதுவரை கூறிய காரியங்களை நிறைவேற்றுவதே உம்ராவாகும். அதாவது இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஏழுதடவை ஓடுவதுடன் உம்ரா நிறைவுறுகிறது.

உம்ரா மட்டும் செய்பவர் இத்துடன் தனது இஹ்ராமைக் களைந்துவிடலாம். ஹஜ் என்பது இத்துடன் மேலும் சில காரியங்களை உள்ளடக்கியதாகும். உம்ராச் செய்வதற்கு குறிப்பான நாட்கள் என்று ஏதுமில்லை. எந்த மாதம் வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் உம்ராச் செய்யலாம்.

ஹஜ்ஜின் மூன்று வகைகளைக் கூறும்போது இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். ஹஜ் மட்டும் செய்பவராக இருந்தால் தொடர்ந்து மேலும் சில கிரியைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.

ஒருவர் துல்கஃதா மாதத்தின் துவக்கத்திலேயே மக்கா வந்து மேற்கூறிய காரியங்களை நிறைவேற்றி முடித்து விட்டாலும் துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள்வரை காத்திருக்க வேண்டும்.

மினாவுக்குச் செல்வது
துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப்பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்யவேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று ‘மினா’ எனுமிடத்துக்குச் செல்லவேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.
தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபி (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மினாவில்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ரபீவு
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தர்வியா நாளின் லுஹர் தொழுகையையும், அரபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத் 
இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். மினாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள். 
அறிவிப்பவர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி) நூல் : புகாரி

‘அரபா’ வுக்குச் செல்வது
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கிவிட்டு ‘அரபா’வுக்குப் புறப்பட வேண்டும்.

நபி (ஸல்) சூரியன் உதயமாகும்வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
மினாவிலிந்து அரபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும் தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.
நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபி (ஸல்) அவர்களுடன் செல்லும்போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : முஹம்மத் பின் அபீபக்ர் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

அரபா நாளில் நோன்பு நோற்பது
அரபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.

அரபாவில் தங்குவதன் அவசியம்
ஹஜ்ஜின் மிகமுக்கியமான கிரியை அரபாவில் தங்குவதுதான். சிறிதுநேரமேனும் அரபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.
“ஹஜ் என்பதே அரபா(வில் தங்குவது)தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா


அரபாவுக்கு ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் வந்துவிடுவது நபிவழி என்றாலும், மறுநாள் பஜ்ருக்கு முன்பாக வந்துவிட்டாலும் ஹஜ் கூடிவிடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

அரபாவில் எந்த இடத்திலும் தங்கலாம் 
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில்தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரபா மைதானத்தின் எந்த இடத்தில் வேண்டுமானலும் தங்கலாம். “அரபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபிமொழி 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் 

அரபாவில் செய்ய வேண்டியவை
“ஹஜ் என்பதே அரபாவில் தங்குவவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், அரபாவில் அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனிடம் அதிகமதிகம் துஆச் செய்ய வேண்டும்.
நான் அரபாவில் நபி(ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழந்துவிட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் : நஸயீ

அரபாவில் இமாம் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து தொழுவார். அதில் சேர்ந்து தொழவேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை செவிமடுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

முஸ்தலிபாவுக்குச் செல்வது
அரபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கிவிட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்றதும் மஃரிபையும் இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கிவிட்டு சுப்ஹ் தொழ வேண்டும். 
நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும் இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி)விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)

மீண்டும் மினாவுக்குச் செல்வது
முஸ்தலிபாவில் பஜ்ரைச் தொழுததும் ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றி புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்துவிட்டு சூரியன் உதயமாவதற்கு முன் ‘மினா’வை நோக்கிப் புறப்பட வேண்டும்.
(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏறி ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும்வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்) 

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும், பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்றுவிடலாம்.
ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 
தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது


ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத் 

ஸபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் ‘ஸபா’வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் “நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸா அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) ‘பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ
2:158   إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَاوَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
2:158நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.
ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ‘ஸஃயு’ என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஹதீஸ்களை ஆராயும்போது ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.

“நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

துவக்கிய இடத்துக்கே திரும்பிவருவது தான் ஒருதடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸபாவில் தான் முடிவுறும், மர்வாவில் முடிவுறாது. மர்வாவில் முடிந்ததிலிருந்து, ஸபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வந்தால் இரண்டு தடவை என்றும் விளங்கலாம். 

தவாஃப் அல்குதூம் செய்யும் முறை


தவாஃப் அல்குதூம் செய்யும் முறை கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ 

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது 
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

அந்தக் கல்லில் வாய்வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டுவிட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.
“நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்” என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்.

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். “ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபுதாவுத், நஸயீ
இதிலிருந்து கஃபாவின் உண்மையான வடிவம் சதுரமானது அல்ல என்பதையும், அரை வட்டமான பகுதியும் சேர்ந்ததே கஃபா எனவும் அறியலாம்.

ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இரண்டு மூலைகள்தான் இருக்க வேண்டும் என்பதை சற்று முன்னர் அறிந்தோம். அரை வட்டமான பகுதிக்கு எதிர்புறம் அமைந்த இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் ‘யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா 

தவாஃப் செய்யும்போது ‘உலூ’ அவசியம்
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.
“நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை 
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்
“கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மித

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹ் அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். 

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால் 
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா. 


தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் ‘மகாமே இப்ராஹீம்’ என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில், எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு ‘மகாமே இப்ராஹீம்’ என்ற இடத்தை அடைந்தபோது ‘மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும், குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும், குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ 

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

மக்கா நகரின் புனிதம்

மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடும் வகையில் நடக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.

ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘தன்யீம்’ என்ற இடம். வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘அளாஹ்’ என்ற இடம். கிழக்கே பதினாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘ஜியிர்ரானா’ என்ற இடம். வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘வாதீ நக்லா’ என்ற இடம். மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘ஹுதைபியா’ எனும் இடம் ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.

இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது? 
“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ 

மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளித்துக் கொள்வது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்வார்கள். ‘தூதுவா’ என்ற இடத்தில் இரவில் தங்கிவிட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : நாபிவு நூல் : புகாரி 

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் தவாஃப் அல்குதூம்

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். 
“ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.” (அல்குர்ஆன் 2:197)
ஹஜ் ஒருமாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான். “ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்துநாட்கள்” என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.(புகாரி) 

எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டியவுடன் மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப் செய்ய வேண்டும். இந்த தவாப் ‘தவாபுல் குதூம்’ என்று கூறப்படுகிறது. ‘குதூம்’ என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம் என்று கூறப்படுகிறது.

இந்த நாளில்தான் இதைச் செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் இந்த தவாஃப்க்குக் கிடையாது. இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்யவேண்டும். ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்துவிட வேண்டும். 

இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை


இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தையல் இல்லாத ஆடை அணிந்து குளித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள் : திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, தாரகுத்னி.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தன்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களின் தலையிலும் தாடியிலும் எண்ணெய்யின் மினுமினுப்பை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
1. இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்கள்; : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா.


2. மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது.
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.”
அல்குர்ஆன் - 2 : 197

இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் இந்த வசனம் தடை செய்கின்றது.

3. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.
“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் - 5:94
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் - 5:95

“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”.
அல்குர்ஆன் - 5:96 

வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.

இந்த வசனங்களில் வேட்டையாடுவதுதான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டையாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றிதிரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டையாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிவிட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும். அந்த முடிவுப்படி நடந்து கொள்ள வேண்டும்.

மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும்.

இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது நோன்பு நோற்க வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் நீங்கள் வேட்டையாடமலிருந்தால் அல்லது உங்களுக்காக வேட்டையாடப்படாமலிருந்தால், நிலத்தில் (மற்றவர்களுக்காக) வேட்டையாடப்பட்டவை ஹலாலாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். உங்களுக்காகவே வேட்டையாடினேன் என்று நான் கூறியதால் நபி(ஸல்) அவர்கள் சாப்பிடவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா

இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப்பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக்கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது.

உயிர்பிராணிகளைக் கொல்லக் கூடாது என்பதில் சில விலக்குப் பெறுகின்றன.
வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம

4. இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்ககூடாது ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்கவேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்றால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ தலைமுடியையோ மூடவேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 

மறுமையில் அவர் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியயதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.
நாங்கள் கடைசி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும்வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து கொண்டார்; மற்றொருவர் அவர்கள் மீது வெயில்படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
அறிவிப்பவர் : உம்முல் ஹுஸைன் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

வெயில்படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

5. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப்பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசிக்கொள்ளக்கூடாது.
இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸின் ஒரு அறிவிப்பில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

6. இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும்வரை மயிர்களை நீக்கக்கூடாது. நகங்களை வெட்டக்கூடாது. தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக்கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்துவிட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஃ’ பேரீச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர் : கஃப் பின் உஜ்ரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்
இந்தக் கருத்து புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.
உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்கவும் எண்ணினால் தனது முடியையும் நகங்களையும் வெட்டாமல் தடுத்துக் கொள்ளட்டும் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ

குர்பானி கொடுக்கக் கூடிய மற்றவர்களுக்குரிய இந்த தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியதுதான்.

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
ஹஜ்ஜுக்குச் செல்பவர் இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும் என்று நாம் விளங்கினோம். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.
மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ‘ஜுஹ்பா’ என்ற இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன்அல்மனாஸில்’ என்ற இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 


இந்தியாவிலிருந்து செல்பவர்கள் ‘யலம்லம்’ வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல் போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

தல்பியா கூறுதல்


தல்பியா கூறுதல்
தல்பியாவின் வாசகம் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்ததற்கு மேல் நாமாக எதையும் அதிகப்படுத்த அனுமதி இல்லாவிட்டாலும், தல்பியாவின் போது இறைவனைப் புகழும் விதமாக நாமாக சில வாசகங்களை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தல்பியாவுடன் உயர்வுகளுக்கு உரியவன் (தல் மஆரீஜ்) என்ற வார்த்தையையும், இது போன்ற கருத்துடைய வார்த்தைகளையும் மக்கள் சேர்த்துக் கூறலானார்கள். இதனைச்செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் (அவர்களைக் கண்டித்து) எதனையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட தல்பியாவுடன் “லப்பைக் லப்பைக் வஸஃதைக, வல்கைரு பியதைக வர்ருக்பாவு இலைக வல்அமல்” என்பதை அதிகப்படியாகக் கூறுவார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இந்த ஹதீஸ்களிலிருந்து தல்பியாவில் இறைவனின் பெருமையைக் கூறும் வாசகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை அறிய முடிகின்றது.

தல்பியாவை உரத்துக் கூறுதல்
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்கள் : ஹாகிம், பைஹகீ.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)

நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
நான் அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல் : இப்னுகுஸைமா

எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.
இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும்வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச் சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும்போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டிவிடுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


தைக்கப்படாத ஆடைகளை கிடைக்கும்போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.
“யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

இஹ்ராம் கட்டுவது


ஒருவர் தொழ நாடினால் அவர் ‘அல்லாஹ் அக்பர்’ என்று தக்பீர் கூறவேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாக கூறுகின்ற இந்த தக்பீர், ‘தஹ்ரீமா’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘தஹ்ரீமா’ என்றால், தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் விலக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.

அதுபோல் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறுவதற்குத்தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் மக்கள் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என விளங்கியுள்ளனர். நெஞ்சில் கைகட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக்கூடாது. ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்வதே தக்பீராகும்.

இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். ‘இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.
ஜுப்பா (குளிராடை) அணிந்து ஒருவர் இஹ்ராம் கட்டிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டார். சற்று நேரம் மௌனமாக இருந்த நபி (ஸல்) அவர்கள், வஹி வந்த பின் ஜுப்பாவைக் கழற்றி விடுமாறு அவருக்குக் கூறினார்கள் (சுருக்கம்)அறிவிப்பவர் : யஃலாபின் உமய்யா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இஹ்ராமுக்குப் பிரத்தியோகமான ஆடை அணிவது அவசியம் என்றாலும், அவ்வாறு ஆடை அணிவதே இஹ்ராம் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால், “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறவேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக உம்ரதன்” என்று கூறவேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும்-ஹஜ்ஜின் அவசியம்

ஹஜ்ஜின் அவசியம்
மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் 
“அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது; அதுதான் ஹஜ்ஜும் உம்ராவும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.
“வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்” என்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸினடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம். உம்ராச் செய்வது கடமையா என்பதைப் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.

“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இரண்டு நாட்கள் பயணத்தொலைவு கொண்ட இடத்துக்கு கணவன் அல்லது திருமணம் செய்ய தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர பெண்கள் பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அயுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண், மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டு தந்தையுடனோ, கணவருடனோ, மகனுடனோ, சகோதரனுடனோ அல்லது திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடனோ தவிர பயணம் மேற்கொள்வது ஹலால் இல்லை” என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : அபுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டபோது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு விட்டார். நான் இன்னின்ன போர்களில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டேன்” என்று கூறினார். அதற்;கு நபி (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் கொண்ட பயணம் மேற்கொள்ளக்; கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.